Their fathers treated the false prophets in the same way
Translation in progress from www.parisurthar.com

கள்ளத்தீர்க்கதரிசி என்றால் யார் என்று இயேசு கிறிஸ்துவே விளக்கம் சொல்லியிருக்கிறார், அது கர்த்தர் தன்னுடைய சீஷர்களுக்கு கற்று கொடுத்த முதல் பாடமாகவும் இருந்தது - எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள் - லூக்கா 6:26


இந்த பாடம் கிறிஸ்துவை அறியாதவர்களுக்குப் போதிக்கப்பட வில்லை, மாறாக கிறிஸ்துவை அறிந்தவர்களுக்கே அதிலும் குறிப்பாக கிறிஸ்துவின் ஊழியத்தை செய்ய போகிற சீஷர்களுக்கே போதிக்கப்பட்டது என்றால் இதை நாம் அறிந்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. புகழ், மேன்மை போன்ற காரியங்கள் கிறிஸ்தவ ஜீவியத்திற்க்கு எதிரானதாகவும், அதிலும் குறிப்பாக ஊழியக்காரர்களுக்கு எதிராக செயல்படுகிற பிசாசின் தந்திரமாகவும் இருக்கிறது, ஏனென்றால், நித்திய நரகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்த நம்மை தன் சொந்த இரத்ததால் மீட்ட இயேசு கிறிஸ்துவுக்கே துதி, கனம், மகிமையெல்லாம் உரியது - 15.பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். 16.அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன். 17.நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென் - I தீமோத்தேயு 1:15-17


இதை தான் சங்கீதகாரனும் "கர்த்தருக்கே மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்" என்று சொல்லியிருக்கிறார், "கர்த்தருக்கே" என்று சொல்லும் பொழுது, நம்முடைய இருதயம், சிந்தை, நாவிலிருந்து இயேசு கிறிஸ்துவுக்கு மாத்திரமே துதி, கனம், மகிமையெல்லாம் ஏறெடுக்கப்பட வேண்டும், எந்த ஒரு சூழ்நிலையிலும் மற்றவர்களை புகழும் மனித ஆராதனைக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதே அர்த்தமாயிருக்கிறது - பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் - சங்கீதம் 29:2    


அதனால் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நம்முடைய இருதயத்தை சீர்தூக்கி பார்க்க வேண்டியது அவசியமாய் இருக்கிறது, உதாரணத்திற்கு நாம் பிரசிங்க மேடைக்கு ஏறுகிறோம் என்றால், நாம் கிறிஸ்துவுக்காகவும் ஆத்தும இரட்சிப்புக்காகவும் மேடை ஏறுகிறோமா? அல்லது நமக்கு தேவன் அருளிய தேவ வரத்தையோ அல்லது வேத ஞானத்தையோ, அல்லது செல்வத்தையோ பிரஸ்தாபப்படுத்த மேடை ஏறுகிறோமா? நாம் கிறிஸ்துவுக்காக காரியத்தை செய்தால் நாம் தீர்க்கதரிசிகளாய் இருக்கிறோம், இல்லாவிட்டால் கள்ளத்தீர்க்கதரிசிகளாய், அதாவது பிசாசுக்கு வேலை செய்கிறவர்களாய் இருக்கிறோம் என்பதில் சந்தேகம் இல்லை.


காரியம் இப்படி இருக்க, மற்றவர்கள் நம்மை புகழ்ந்து பேசும் படி நடந்துக்கொள்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை தான் ஏரோதின் வாழ்க்கையில் பார்க்கிறோம் - 21.குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். 22.அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். 23.அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான் - அப்போஸ்தலர் 12:21-23

லூக்காவின் புஸ்தகத்திலிருந்து


இயேசு கிறிஸ்து தன் சீஷர்களை நியமித்ததை குறித்து லூக்கா இவ்வாறு எழுதியுள்ளார் - 12.அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். 13.பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். 14.அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தொலொமேயு, 15.மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன், 16.யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே - லூக்கா 6:12-16


இப்படி சீஷர்களை நியமித்த கர்த்தர், தன் சீஷர்களுக்கு கற்றுக் கொடுத்த முதல் பாடமே, கிறிஸ்துவுக்காக நாம் பாடுகளை சகித்தால் தீர்க்கதரிசிகளாகவும், அதே சமயத்தில் நம் பெருமைக்காக ஊழியம் செய்தால் கள்ளத்தீர்க்கதரிசிகளாக மாறி விடுவோம் என்பதாகும் - 20.அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது. 21.இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள். 22.மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். 23.அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள். 24.ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது. 25.திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள். 26.எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள் - லூக்கா 6:20-26


இந்த புகழ் என்கிற பிசாசின் தந்திரத்தில் இருந்து தப்பிக்க, முதலாவது எந்த தகுதியும் இல்லாத(அப்பிரயோஜனமான) நம்மை ஊழியத்துக்கு அழைத்த தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், மேலும், யாராவது நம்மை புகழும் பொழுது "நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம்" என்று சொல்லி தப்பிக்கவும் வேண்டும் - 7.உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ? 8.நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா? 9.தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே. 10.அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார் - லூக்கா 17:7-10


மத்தேயுவின் சாட்சியுள்ள வாழ்க்கை


தனக்கு பெருமை சேர்க்கும் படி செய்யும் ஊழியம் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கான காரியம் என்பதை அறிந்த மத்தேயு, தான் எழுதின (மத்தேயுவின்) சுவிசேஷ புஸ்தகத்தில் தன்னை குறித்த முன்னுரை எதையுமே எழுத வில்லை, தன்னை குறித்துச் சொல்ல வேண்டிய காரியங்களை கூட ஒரு மூன்றாவது மனுஷனை குறித்து சொல்லுவது போல் எழுதியுள்ளார், எப்படியெனில் மத்தேயு தன்னுடைய ஊழிய அழைப்பை குறித்துச் சொல்லும் பொழுது "ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த என்னை இயேசு கிறிஸ்து எனக்குப் பின்சென்றுவா என்று அழைத்தார்" என்று எழுந்திருக்கலாம், ஆனால் அவரோ ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனை என்று எழுதியுள்ளார் - 9.இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான். 10.பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். 11.பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். 12.இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. 13.பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார் - மத்தேயு 9:9-13 


அது மாத்திரம் இல்லாமல், இயேசு கிறிஸ்து மாத்திரமே அவருடைய இருதயத்தில் இருந்ததினால், தன்னுடைய காரியங்களை குறித்து ஒன்றும் எழுதாமல், மற்ற சீஷர்களை குறித்து தான் அதிகமாய் எழுதியுள்ளார், உதாரணத்திற்கு பேதுருவின் பெயரை 24 முறை குறிப்பிட்டுள்ளார், இயேசு கிறிஸ்துவின் மறுரூப சம்பவத்தை குறித்து எழுதும் பொழுதும், அதை தரிசித்த பேதுரு யாக்கோபு மற்றும் யோவானை குறித்து எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் எழுத முடிந்தது - 1.ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், 2.அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று - மத்தேயு 17:1-2


இப்படி கிறிஸ்து மாத்திரமே அவருடைய இருதயத்தில் இருந்ததினால் தான், கர்த்தர் மத்தேயு எழுதின சுவிசேஷ புஸ்தகத்தை புதிய ஏற்பாட்டில் முதலாவது புஸ்தகமாக இடம்பெறச் செய்து, அதற்கு மத்தேயு என்று பெயரிட்டார்.


பவுலின் சாட்சியுள்ள வாழ்க்கை


அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவ ஜீவியமே தேவநாமம் மகிமைப்படும் படியான வாழ்க்கை வாழ்வது தான், ஊழியம் என்பதே இயேசு கிறிஸ்துன் நாமத்தை மகிமை படுத்துவது தான், அதனால் தான் குமாரனாகிய இயேசு கிறிஸ்து அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு நம்மை அழைத்தார் என்று எழுதப்பட்டுள்ளார் - 28.அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 29.தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; 30.எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார் - ரோமர் 8:28-30


அது மாத்திரம் இல்லாமல், தனது ஊழியத்தில் எவ்வளவோ அற்புதங்கள் நடந்திருந்தாலும், அவைகளை மிகைப் படுத்தாமல், நாம் இன்னும் கர்த்தரை நோக்கி பார்க்க வேண்டிய காரியங்களையே குறித்து தியானித்துக் கொண்டிருந்தார் - 19.பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு. 20.எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன் - II தீமோத்தேயு 4:19-20 


சுய புகழ்ச்சியின் ஆபத்து

இப்படி மற்றவர்கள் நம்மை புகழ்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை விளக்க "உங்களுக்கு ஐயோ" என்று கர்த்தர் சொன்னதிலிருந்து, நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்துக் கொள்ளலாம் - எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள் - லூக்கா 6:26