இயேசு கிறிஸ்து தன் சீஷர்களை எப்படி பக்குவப்படுத்தினார், அல்லது தன் பக்கமாக இழுத்துக் கொண்டார் என்பதை தான் இந்த சம்பவங்களில் பார்க்கிறோம், கர்த்தரோடு ஊழியத்துக்கு சென்ற சீஷர்களுக்கு, இயேசு கிறிஸ்து ஐந்து அப்பங்களை கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்த அற்புதம் மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்திருக்கும், காரணம் அப்பம் என்பது இன்றளவும் ஒரு விலையேறப்பெற்ற பொருளாக தான் இருக்கிறது, அதனால் தான் 12 சீஷர்களும் ஆளுக்கொரு கூடை வீதம் 12 கூடை நிறைய மீதம் எடுத்தார்கள் - 31.அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்; ஏனெனில், வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது. 32.அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள். 33.அவர்கள் புறப்பட்டுப் போகிறதை ஜனங்கள் கண்டார்கள். அவரை அறிந்த அநேகர் சகல பட்டணங்களிலுமிருந்து கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள். 34.இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். 35.வெகுநேரம் சென்றபின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், வெகு நேரமுமாயிற்று; 36.புசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை; ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 37.அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள். 38.அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள். 39.அப்பொழுது எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். 40.அப்படியே வரிசை வரிசையாய், நூறுநூறுபேராகவும் ஐம்பதைம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள். 41.அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார். 42.எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். 43.மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். 44.அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள் - மாற்கு 6:31-44
சீஷர்கள் தாங்கள் மீதம் எடுத்த 12 கூடை அப்பத்தையும் மீனையும் விற்று கொஞ்ச நாள் இந்த உலக பாடுகளில் இருந்து விடுபடலாம் என்றோ, அல்லது தம் பழைய நண்பர்களுடன் சேர்ந்து சில நாள் இந்த உலகத்தை அனுபவிக்கலாம் என்றோ எண்ணியிருப்பார்கள், ஆனால் அவர்கள் நினைத்தது ஒன்றுமே நடக்கவில்லை, காரணம் அவர்கள் பயணித்த படவு எதிர்காற்றினால் இரவின் நாலாம் ஜாமம் வரைக்கும் கடலில் அலைப்பட்டுக் கொண்டிருந்தாம், இரவின் நாலாம் ஜாமம் என்றால் விடியற்காலை 3 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரம் ஆகும், அப்படி சீஷர்கள் எறக்குறைய 9 மணி நேரமாக எதிர்க்காற்றோடு போராடிக்கொண்டிருந்தார்கள் என்றால் நிச்சியமாகவே அவர்களிடம் இருந்த 12 கூடை அப்பமும் மீனும் கடலின் அலைகளினால் தண்ணீர் பட்டு பிரயோஜனம் அற்றதாக போயிருந்தியிருக்கும், அப்படிபட்ட உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் தான் கர்த்தர் அவர்களிடம் வந்து அவர்களை காப்பாற்றினார்.
45அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். 46அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார். 47சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார். 48அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார். 49அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள். 50அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி, 51அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். 52அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமற்போனார்கள். 53அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரை பிடித்தார்கள் - மாற்கு 6:50-52
கர்த்தர் ஏழு அப்பங்களை கொண்டு நாலாயிரம் பேரை போஷித்த பொழுது, கடந்த முறை 12 கூடைகள் நிறைய மீதியான துணிக்கைகளை எடுத்த சீஷர்கள், இந்த முறை ஏழு கூடைகள் நிறைய மீதியான துணிக்கைகளை மாத்திரமே எடுத்தார்களாம் - 1அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து: 2ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; 3இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். 4அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை பேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள். 5அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள். 6அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். 7சில சிறுமீன்களும் அவர்களிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். 8அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்கள். 9சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார் - மாற்கு 8:1-9
சீஷர்கள் ஏழு கூடைகள் நிறைய மீதியான துணிக்கைகளை மாத்திரமே எடுத்தார்களென்றால், 12 பேரில் 5 பேர் மீதமெடுக்காமல் தங்களிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்துவிட்டார்கள் என்று தானே அர்த்தம், அப்பொழுது கர்த்தர் சீஷர்களோடு பயணித்து தல்மனூத்தாவின் எல்லைக்கு வந்ததை பார்க்கிறோம் - 10உடனே அவர் தம்முடைய சீஷரோடேகூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார். 11அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 12அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 13அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார் - மாற்கு 8:10-13
ஆனால் தல்மனூத்தாவில் இயேசு கிறிஸ்து உபதேசித்ததை கேட்ட சீஷர்கள், இயேசு கிறிஸ்து மாத்திரம் நமக்கு போதும் என்று சொல்லி தங்களிடமிருந்த மீதியான துணிக்கைகளை(ஏழு கூடைகளை) இது தேவையில்லை என்று உதறி விட்டு போனார்களாம், அப்படி சீஷர்கள் தன் உலக காரியங்களை உதறி விட்டு இயேசு கிறிஸ்துவோடு பயணித்ததை தான் "படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது" என்று வேதாகமம் சொல்லுகிறது - 14சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள் (மூலபாஷையில், உதறி விட்டு போனார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது); படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது. 15அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார் - மாற்கு 8:14-15
உங்கள் வாழ்க்கை படவில் இருப்பது என்ன? உலக அப்பங்களா? இல்லை ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்துவா? வேதாகமம் சொல்லுகிறது நமது வாழ்க்கை படவில் ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே இருக்க வேண்டும் என்று.