இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி) தற்சுரூபமாக, அதாவது பிதாவாகவும் (என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் - யோவான் 14:9), வார்த்தை என்கிற குமாரனாகவும்(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), பரிசுத்த ஆவியானவராகவுமாக(கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இருக்கின்றார்.
இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த அப்போஸ்தலனாகிய யோவான், தேவரகசியங்களை குறித்துச் சொல்லும் பொழுது, பிதாவாகிய பரலோகத்தின் தேவன் - பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் ஒரே தேவனாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
குமாரனை குறித்து சொல்லும் பொழுது, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனின் மூன்று குமாரர்களும் ஜலம், இரத்தம், ஆவியாக இயேசு கிறிஸ்து என்கிற ஒரே தெய்வமாக வெளிப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8, அதனால் தான் இயேசு கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்லுகிறது - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7
மோசேயின் விளக்கம்
தேவ மனிதனாகிய மோசே கர்த்தரிடம், உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்று கேட்டதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 18.அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான். 19.அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி, 20.நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார். 21.பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. 22.என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன். 23.பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார் - யாத்திராகமம் 33:18-23
அப்பொழுது மேகஸ்தம்பத்தில் இறங்கின கர்த்தர் (வார்த்தையானவர்), கர்த்தர், கர்த்தர் என்று அழைத்து தன்னோடு பிதாவும் பரிசுத்த ஆவியானவரும் இருக்கிறார்கள் என்று தன்னுடைய மகிமையை காண்பித்தார் - 5.கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார். 6.கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர், இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். 7.ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார். 8.மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு: 9.ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த ஜனங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள்; நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான். 10.அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும் - யாத்திராகமம் 34:5-10
இப்படியாக நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், பிதா, வார்த்தை, மற்றும் பரிசுத்த ஆவி என்கிற காணக்கூடாத தேவனுடைய தற்சுரூபமாயிருக்கிறார், எப்படியெனில், திரியேக தேவனில் வார்த்தையானவர் மாம்சத்தில் வெளிப்பட்ட பொழுது, அவர் பரிசுத்தஆவியினாலும் பிதாவின் வல்லமையினாலும் நிரப்பப்பட்டவராக இருந்தார், இருக்கிறார், வெளிப்படுவார்.