Everyone who has heard and learned from the Father
Translation in progress from www.parisurthar.com
இயேசு கிறிஸ்துவை கருவில் சுமந்த மரியாள், தான் கன்னியாக இருக்கும் பொழுதே கர்த்தரை பெற்றேன் என்று சொல்ல முடியாத சூழ்நிலை, யோசேப்பும் இயேசு கிறிஸ்து பெத்லகேம் ஊரிலே பிறந்தார் என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் தான் கர்த்தரின் இளமை காலம் இருந்தது, அதுவே தேவனுடைய சித்தமாகவும் இருந்தது - 13.அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். 14.அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போய், 15.ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது - மத்தேயு 2:13-15
இயேசு கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவானும் இயேசு கிறிஸ்துவை தாவீதின் வம்சத்தில் பிறந்தவர் என்று அறிமுகப்படுத்தவில்லை, சீஷர்களும் இயேசு கிறிஸ்துவை தாவீதின் வம்சத்தில் பிறந்தவர் என்று பிரசங்கிக்கவில்லை, அதனால் பார்ப்பவர்கள் எல்லோருக்குமே கர்த்தரை குறித்த சந்தேகங்கள் இருக்க தான் செய்தன - 53.இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு, 54.தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? 55.இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? 56.இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, 57.அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார் - மத்தேயு 13:53-57 & 40.ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். 41.வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? 42.தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள் - யோவான் 7:40-42
அப்படி இருக்கும் பொழுது, அறிமுகமே இல்லாத சிலர் இயேசு கிறிஸ்துவை எப்படி தாவீதின் குமாரனே என்று அழைத்தார்கள்? முதலாவது குருடர்கள் இயேசு கிறிஸ்துவை தாவீதின் குமாரனே என்று கூப்பிட்டார்கள் - 27.இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். 28.அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். 29.அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார் - மத்தேயு 9:27-29
அதன் பின்பு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ இயேசு கிறிஸ்துவை தாவீதின் குமாரனே என்று கூப்பிட்டாள் - 21.பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். 22.அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். 23.அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். 24.அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். 25.அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள். 26.அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். 27.அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். 28.இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். 29.இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார் - மத்தேயு 15:21-29
அதன் பின்பு, எரிகோவில் பிச்சை கேட்டுக்கொண்டிருந்த பர்திமேயு என்கிற ஒரு குருடன் இயேசு கிறிஸ்துவை தாவீதின் குமாரனே என்று கூப்பிட்டான் - 46.பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். 47.அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். 48.அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். 49.இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். 50.உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். 51.இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். 52.இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான் - மாற்கு 10:46-52
அதன் பின்பு, திரளான ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் - 6.சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, 7.கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். 8.திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். 9.முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். 10.அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். 11.அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள் - மத்தேயு 21:6-11
உலகமே கிறிஸ்து தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து அல்லவா வருவார் என்று சொல்லி தடுமாறிக் கொண்டிருந்த சமயத்தில், அறிமுகமே இல்லாத சிலர் இயேசு கிறிஸ்துவை எப்படி தாவீதின் குமாரனே சொல்லி அழைத்தார்கள், அது நிச்சியமாகவே பிதாவின் கிருபை தான் - 43.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம். 44.என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். 45.எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான் - யோவான் 6:43-45