இயேசு கிறிஸ்து தன்னிடம் கொண்டுவரப்பட்ட திமிர்வாதக்காரனை குறித்து, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது என்று ஏன் கேட்டார்
இதில் முதலாவது நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால், "உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது" என்றும் தேவனால் தான் சொல்ல முடியும், அதே சமயத்தில் "எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட" என்றும் தேவனால் தான் சொல்ல முடியும், அப்படியென்றால் இந்த இரண்டு காரியத்தில் எது எளிது என்கிற கேள்வி தேவனுக்குரியதே அன்றி, மனிதர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி கிடையாது.
1.சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டு; 2.உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார். 3.அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்; 4.ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள். 5.இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். 6.அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்: 7.இவன் இப்படி தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். 8.அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன? 9.உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது? 10.பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: 11.நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 12.உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்குமுன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள் - மாற்கு 2:1-12
சூரியன், சந்திரன், உயர்ந்த மலைகள், பறந்து விரிந்திருக்கும் சமுத்திரம் என சகலத்தையும் வார்த்தையினால் உண்டாக்கின தேவனுக்கு ஒரு காரியம் மிக கடினமானதாக தான் இருந்திருக்கிறது, அதைதான் இந்த கேள்வி தெளிவுப்படுத்துகிறது.
மனிதனை உண்டாக்கின தேவனுக்கு அவனை குணப்படுத்துவது எளிதான காரியம் தான், ஆனால் பாவங்களை மன்னிப்பது மிக கடினமானதாக இருந்தது, ஏன் என்றால் அது அவரை சிலுவை வரை கொண்டு சென்று மரணத்தையும் ருசிக்க செய்தது, அந்த கஷ்டமான காரியத்தை முடிக்க தான் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார், அதை நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதினால் தான் இயேசு கிறிஸ்து அந்த கேள்வியை கேட்டார் - 18.கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார். 19.ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், 20.உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள் - அப்போஸ்தலர் 3:18-20
இப்படி நம் பாவங்களுக்காக அடிக்கப்பட்டு, பாடுபட்டு, இரத்தம் சிந்தி நம்மை நித்திய நரகத்திலிருந்து மீட்ட தேவனுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம், பரிசுத்த வாழ்க்கை வாழ ஒப்பு கொடுப்போம் - 11.கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், 12.வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். 13.அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், 14.நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! - எபிரெயர் 9:11-14