ஆரம்ப நாட்களில் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள், இயேசு கிறிஸ்து தான் மெய்யான தேவன் என்பதை அறியாமல், தாங்கள் ஒவ்வொரு நாளும் குரு என்றும் ரபி என்றும் அழைப்பது, எலியாவை போலவோ, அல்லது தாவீதை போலவோ, அல்லது ஒரு பூர்வகாலத்து தீர்க்கதரிசியை போலவோ ஒரு விசேஷித்த நபர் என்கிற எண்ணம் உள்ளவர்களாய் தான் இருந்தார்கள்.
அதனால் தான் மக்கள், இயேசுவை கிறிஸ்துவை எலியா என்றும், ஒரு தீர்க்கதரிசி என்றும், உயிர்த்தெழுந்த யோவான் என்று சொன்ன பொழுது, அப்படியல்ல எங்களை அனுப்பின இயேசு தேவாதி தேவன் என்று விளக்கம் கொடுக்கும் ஞானமும் தைரியமும் இல்லாதிருந்தது - 7.அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து, 8.வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டு போகவும்; 9.பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார். 10.பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால், அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள். 11.எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். 12.அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து; 13.அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச் சொஸ்தமாக்கினார்கள். 14.அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோது ராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 15.சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள். 16ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான் - மாற்கு 6:7-16
இயேசு கிறிஸ்துவை மக்கள் எலியா என்றும், பூர்வகாலத்து தீர்க்கதரிசி என்றும் சொன்னது சீஷர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கும், அதனையும் சந்தோஷத்தோடு வந்து கர்த்தரிடம் சொல்லியிருப்பார்கள் - அப்பொழுது அப்போஸ்தலர் இயேசுவினிடத்தில் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள் யாவையும் அவருக்கு அறிவித்தார்கள் - மாற்கு 6:30
இதனை சொன்ன சீஷர்களுக்கு கர்த்தர் பதில் ஒன்றுமே சொல்லவில்லை, அவர்களிடம் "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்" என்று கேட்கவும் இல்லை, மாறாக அவர்களை வனாந்தரமான இடத்திற்கு போஜனம்பண்ண அழைத்து சென்றாராம். இளைப்பாறுவதும், போஜனம்பண்ணுவதும் நோக்கமாக இருந்திருந்தால், கர்த்தர் சீஷர்களை செழிப்பான இடத்திற்கோ, அல்லது ஒரு பட்டணத்திற்கு தானே அழைத்து சென்றிருக்க வேண்டும். இங்கு போஜனம் என்று சொல்லப்பட்டது நம் ஆவிக்குரிய போஜனத்தை, அதாவது இயேசு கிறிஸ்து தான் ஜீவ அப்பம் என்பதை நாம் அறிந்து அவரை ஏற்றுக் கொள்வதையே குறிக்கிறது - அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்; ஏனெனில், வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது - மாற்கு 6:31
இதன் பின்பு இயேசு கிறிஸ்து அற்புதங்களினாலும், உபதேசத்தினாலும் சீஷர்களுக்கு தன் கர்த்தத்துவதை(தான் தேவன் என்பதை) வெளிப்படுத்தினார்.
வனாந்தரத்தில் தன்னிடம் வந்த எல்லா வியாதியஸ்தர்களையும் சொஸ்தமாக்கினது
ஐந்து அப்பங்களை கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்தது
கடலின் மேல் நடந்து வந்து சீஷர்களை காப்பாற்றினது
கெனேசரேத்து நாட்டில் தன்னை தொட்டவர்களை எல்லாம் சொஸ்தமானது
தீரு சீதோன் பட்டணத்தில் கானானிய ஸ்திரீயின் மகளை சுகப்படுத்தினது
கலிலேயாக் கடலருகே சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை சுகப்படுத்தினது
கொன்னைவாயுடைய ஒரு செவிடனை சுகப்படுத்தினது
ஏழு அப்பங்களை கொண்டு நாழாயிரம் பேரை போஷித்தது
பெத்சாயிதாவில் குருடனை சுகப்படுத்தினது
இப்படி தன் சீஷர்களை பக்குவப்படுத்தின பின்பு, கர்த்தர் கேட்ட தன் சீஷர்களிடம் கேள்வி தான் "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்" என்பது, அப்பொழுது பேதுரு தயங்காமல் "நீர் கிறிஸ்து" என்று பதில் சொன்னான் - 27பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்புச் செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 28அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 29அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான். 30அப்பொழுது, தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்- மாற்கு 8:27-30
கர்த்தருக்கு தெரியும் நமது பலவீனங்களும், நம்முடைய எண்ணங்களும், அதனால் நாம் அவரையே அண்டிக்கொள்வோம், அவரே நமக்கு நல்ல பிதாவாக காரியங்களை சொல்லி கொடுப்பார் - இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் - மத்தேயு 16:17