வரங்களை பெற்ற சீஷர்கள் ஊமையான ஆவியை துரத்த கூடாமல் போனதற்கான காரணத்தை கர்த்தரிடம் கேட்ட பொழுது, கர்த்தர் சொன்ன பதிலிலிருந்து உபவாசத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம் - 19.அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள். 20.அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 21.இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார் - மத்தேயு 17:19-21 & 28.வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். 29.அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார் - மாற்கு 9:28-29
அதே சமயத்தில் தானே, கர்த்தர் தான் எடுத்துக் கொள்ளப்படும் வரை, தன்னுடைய சீஷர்கள் உபவாசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சொல்லி இருந்தார், அப்படி என்றால் சீஷர்களிடம் காணப்பட்ட கர்த்தருக்கு விருப்பமில்லாத காரியங்களான "நான் செய்தேன்", "நான் பெரியவன்" என்கிற காரியங்கள் மணவாளனை துக்கப்படுத்துவதாகவும், ஆனால் ஜெபமும் உபவாசமும் நாம் அவரை கிட்டி சேரும் வழியாகவும் இருக்கிறது, மேலும் உபவாசமானது, நாம் நம் சுய பலத்தை சாராமல், தேவனை சார்ந்திருக்க செய்வதாகவும் இருக்கிறது - 18.யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம் பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருப்பதென்னவென்று கேட்டார்கள். 19.அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. 20.மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் - மாற்கு 2:18-20
மேலும் நம்முடைய உபவாசம் தேவன் ஒருவருக்கே பிரியமுள்ளதாக இருக்க வேண்டும் - 16நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 17நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. 18அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் - மத்தேயு 6:16-18