இயேசு கிறிஸ்துவின் நாட்களில் தேவாலயத்தில் பல பிரிவுகள் இருந்தன, அதில் மிகவும் பிரபலமானவைகள் பரிசேயர் சதுசேயர் என்ற இரண்டு அமைப்புகள், இந்த அமைப்புகள் தேவன் அருளிய வேதத்தை சார்ந்திருப்பதைக் காட்டிலும் தங்களின் கொள்கை, கட்டமைப்பு போன்ற காரியங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தன, இப்படி தேவனை சார்ந்திருந்து அவரை மேன்மை படுத்தாமல், சபை அமைப்பை சார்ந்திருந்து அதனை மேன்மை படுத்தினவர்களை குறித்து தான் இயேசு கிறிஸ்து இந்த அறிவுரையை கூறினார் - இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார் - மத்தேயு 16:6
இப்படி இயேசு கிறிஸ்துவை மேன்மைப்படுத்தாமல், தான் சார்ந்திருக்கும் சபை அமைப்பை பிரசங்கிப்பவர்களின் உபதேசம் நிச்சியமாகவே ஆபத்தானது, அதை குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாயிருக்கவேண்டும் - அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள் - மத்தேயு 16:12
இயேசு கிறிஸ்துவை மாத்திரம் சார்ந்திருப்பவர்களை தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கும் வேதாகமம், ஒரு சபை அமைப்பை தனக்கு அடையாளமாக கொண்டிருப்பவர்களை சமயத்தார் அல்லது மதத்தார் என்றே அழைக்கிறது, அது எவ்வளவு ஆபத்தானது - 17.அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, 18.அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள் - அப்போஸ்தலர் 5:17-18
மதப்பிரிவு அல்லது மதஅமைப்புகள் கண்களை மறைத்ததினால் தான், இயேசு கிறிஸ்து இந்த பூமியில் இருக்கும் பொழுதே பரிசேய மதஅமைப்பை சேர்ந்தவர்களால் கர்த்தரை ஏற்றுக் கொள்ள முடியாமல், அவரை எதிர்கிறவர்களாகவும் மாறி நித்திய ஜீவனை நழுவ விட்டார்கள் - ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர் நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள் - யோவான் 12:42