Do not touch Me
இயேசு கிறிஸ்து நமக்கு மெய்யான மகா பரிசுத்த பலிபீடமாய் இருக்கும் பொழுது, அவரை தொட்டு பரிசுத்தத்தையும் சுகத்தையும் பெற்றுக் கொள்வது நமது கடமையாய் இருக்கிறது - 36.பாவநிவிர்த்திக்காக ஒவ்வொருநாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்த பின், அந்தப் பலிபீடத்தைச் சுத்திசெய்ய வேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம் பண்ணக்கடவாய். 37.ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும் - யாத்திராகமம் 29:36-37
காரியம் இப்படி இருக்கும் பொழுது, தன்னை தேடி வந்த மகதலேனா மரியாளிடம் இயேசு கிறிஸ்து என்னைத் தொடாதே என்று சொன்னதின் அர்த்தம் தான் என்ன? தன்னை யாரும் தொடகூடாது என்பது ஒரு நோக்கமாக இருக்குமானால் மகதலேனா மரியாள் தன்னை நெருங்க முடியாத தூரத்திலோ அல்லது கல்லறை இருந்த கன்மலையின் மேல் இருந்தவாரோ இயேசு கிறிஸ்து தரிசனம் தந்திருக்கலாம் - 15.இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். 16.இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 17.இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார் - யோவான் 20:15-17
அது மாத்திரம் இல்லாமல், வேதாகமம் நாம் தேவனை தடவியாகிலும் கண்டுபிடிக்க வேண்டும் என்று சித்தம் கொண்டிருந்ததாக சொல்லும் பொழுது, ஏன் இயேசு கிறிஸ்து என்னைத் தொடாதே என்று சொன்னார்? - 26.மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். 27.கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே - அப்போஸ்தலர் 17:26-27
அது மாத்திரம் இல்லாமல், ஒரு குஷ்டரோகியை தோடுகிற எந்த மனஷனும் தீட்டுபட்டவனாக மாறும் சூழ்நிலையில், இயேசு கிறிஸ்து குஷ்டரோகியை தொட்டு அவனை சுகப்படுத்தி தான் தேவன் என்பதை நிரூபித்தார், இப்படி தீட்டுள்ளவர்களையும் தொட வல்லமையுள்ள தேவன் மகதலேனா மரியாளிடம் "என்னைத் தொடாதே" என்று சொன்னதின் அர்த்தம் தான் என்ன? - 40.அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். 41.இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். 42.இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான் - மாற்கு 1:40-42
செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான் - எண்ணாகமம் 19:11
அல்லது எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான் - லேவியராகமம் 5:3
அது மாத்திரம் இல்லாமல், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை யார் வேண்டுமானாலும் தொடலாம் என்பதை கெனேசரேத்து நாட்டில் நிரூபித்தார் - 34.பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள். 35.அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, 36.அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள் - மத்தேயு 14:34-36
இப்படி பட்ட தேவன் மகதலேனா மரியாளிடம் "என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை" என்று சொன்னதன் நோக்கம் என்னவென்றால், அவர் பிதாவினிடத்திற்கு ஏறிப்போன பின்பும், அதாவது பரலோகத்திற்கு சென்ற பின்பும் நாம் அவரை தொட முடியும் என்பதை உணர்த்துவதற்காகத் தான் - இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார் - யோவான் 20:17
அது மாத்திரம் இல்லாமல், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், அவர் பூமியில் இருக்கும் பொழுது கெனேசரேத்து நாட்டை சேர்ந்த பிணியாளிகளெல்லாரும் தொட்டு சுகம் பெற முடியும் என்றால், பரலோகத்தில் இருக்கும் அவரை நாம் தொட்டு சுகம் பெற முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, நமக்காக தன் ஜீவனையே தந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தோடு தொடுவோம், பரிபூரண சுகம் பெறுவோம் - இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் - எபிரெயர் 13:8
என்னைத் தொட்டுப்பாருங்கள்
மரித்து உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்து, மாம்சமும் எலும்புகளும் உள்ள சரீரம் உள்ளவராகவும், நாம் தொடக்கூடிய தேவனாகவும் இருக்கிறார் என்று வேதாகமம் சொல்லுகிறது - 36.இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 37.அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். 38.அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? 39.நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, 40.தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார் - லூக்கா 24:36-40
மரித்து உயிர்தெழுந்த பின்பு தன் கைகளையும் கால்களையும் தன் சீஷர்களிடம் காண்பித்த இயேசு கிறிஸ்து, ஏன் தன்னை தொட்டுப்பார்க்க சொன்னார்? ஒரு பொருளை பார்த்து ஊர்ஜிதம் செய்ய முடியாத சூழ்நிலையில் தொட்டு பரிசோதித்து ஊர்ஜிதம் செய்வது வழக்கம், உதாரணத்திற்கு ஒரு சூடான பொருளை தொட்டு பார்த்து தான் உறுதி செய்ய முடியும், இப்பொழுது சீஷர்கள் முன்பு நிற்பதோ தேவாதி தேவனாகிய இயேசு கிறிஸ்து, அவர் இந்த பூமியில் இருந்த பொழுது மக்கள் அவரை தொட்டு சுகம் பெற்று செல்வது வழக்கம், இதை சீஷர்களும் நன்றாய் அறிந்திருந்தார்கள், அப்படியேன்றால் அவரை தொடும் பொழுது நம் சரீரத்தில் ஏற்படும் நல்ல மாற்றத்தை கொண்டு நாம் தொடுவது இயேசு கிறிஸ்து என்பதை அறிந்துக் கொள்ளலாம்.