Spirit of Father or Spirit of Son
Translation in progress from www.parisurthar.com

தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவரை பிதாவின் ஆவி என்று குறிப்பிடுகிறார் - 17.மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள். 18.அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். 19.அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். 20.பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர் - மத்தேயு 10:17-20

அதே சமயத்தில் நம் பரலோக பிதாவோ, பரிசுத்த ஆவியானவரை குமாரனுடைய ஆவி என்று குறிப்பிடுகிறார் - மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.  ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய் - கலாத்தியர் 4:6-7


பரிசுத்த ஆவியானவர் என்றாலே, பிதாவாகிய திரியேக தேவனில் ஒருவர் என்று அறியப்பட்டிருக்கும் பொழுது, வேதாகமம் பரிசுத்த ஆவியானவரை பிதாவின் ஆவி என்றும் அதே சமயத்தில் குமாரனுடைய ஆவி என்றும் குறிப்பிட காரணம் என்ன?


வேதாகமத்தின் விளக்கம்

மம்ரேயின் சமபூமியிலே தனக்கு தரிசனமான கர்த்தரை, ஆபிரகாம் அப்பம் புசிக்க வரும்படி வருந்தி கேட்டுக்கொண்டார் என்று வேதாகமத்தில் பார்க்கிறோம் - 1.பின்பு, கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, 2.தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து; 3.ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். 4.கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். 5.நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள். 6.அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான். 7.ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான் - ஆதி 18:6-7


ஆனால் ஆத்தும இரட்சிப்பிற்கான ஜீவஅப்பத்தை ஏதிர் பார்த்துக் கொண்டிருந்த ஆபிரகாம்,  ஜீவஅப்பத்தின் அர்த்தத்தை விளக்கும் பொருட்டு அப்பத்திற்கு பதிலாக வெண்ணை, பால் மற்றும் சமைப்பித்த கன்று என மூன்று பொருட்களை கொண்டு வந்தார், அதனை தேவனும் அங்கீகரித்து இதுவே ஜீவஅப்பத்தின் சாயல் என்று உறுதிப்படுத்தினார் - ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள் - ஆதி 18:8



இதில் சமைப்பித்த கன்று திரியேக தேவனில் வார்த்தையானவரையும், வெண்ணையும் பாலும் முறையாக பிதாவையும் பரிசுத்த ஆவியானவரையும் குறிக்கிறது, இப்படி ஜீவஅப்பமாகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனாய் இருப்பதை தான் இது உணர்த்துகிறது, இதை தான் அப்போஸ்தலனாகிய யோவான், வார்த்தையானவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் என்று குறிப்பிடுகிறார் - அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது - யோவான் 1:14



வெண்ணை

ஜீவஅப்பத்தின் அர்த்தத்தை விளக்க, ஆபிரகாம் கொண்டு வந்த மூன்று பொருட்களில், முதலாவது பசுவின் வெண்ணை இருந்தது, காரணம் கிருபையின் பிதாவே நம்மை இழுத்துக் கொள்கிறவராய் இருக்கிறார் - 44.என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். 45.எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான் - யோவான் 6:44-45


இந்த கிருபையை, அதாவது வார்த்தை என்கிற ஜீவஅப்பத்தில் நிறைந்திருந்த கிருபையை, கிருபையின் ஆவி என்றே வேதாகமம் சொல்லுகிறது - 29.தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள். 30.பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். 31.ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே - எபிரெயர் 10:29-31



பால்


ஜீவஅப்பத்தின் அர்த்தத்தை விளக்க, ஆபிரகாம் கொண்டு வந்த மூன்று பொருட்களில், இரண்டாவது பசுவின் பால் இருந்தது, காரணம் சத்தியம் எண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரே நம்மை பக்குவப்படுத்துகிறவராய் இருக்கிறார் - ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன் - I கொரிந்தியர் 12:3



இந்த சத்தியத்தை, அதாவது வார்த்தை என்கிற ஜீவஅப்பத்தில் நிறைந்திருந்த சத்தியத்தை, சத்திய ஆவி என்றே வேதாகமம் சொல்லுகிறது - 15.நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். 16.நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 17.உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள் - யோவான் 14:15-17



வெண்ணையும் பாலும் சமைப்பித்த கன்றும்


பசுவானது வெண்ணையையும் பாலையும் சுரக்கும் பொழுது, அது தன் கன்றுக்காக சுரந்ததேயன்றி மற்றவர்களுக்காக சுரந்தது கிடையாது, இப்படி கன்றுக்காக சுரந்த வெண்ணையும் பாலும் தான், அடிக்கப்பட்ட கன்றோடு ஜீவஅப்பமாக பரிமாறப்பட்டது - ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள் - ஆதி 18:8


இப்படி பசுவின் வெண்ணையையும் பாலையும் நாம் பெற்றுக் கொள்ளும் பொழுது, கன்றை பொருத்தவரை அது தன் தாயின் பாலாக தான் இருக்கிறது - 17.மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள். 18.அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். 19.அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். 20.பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர் - மத்தேயு 10:17-20

அதே சமயத்தில் இந்த வெண்ணையும் பாலும், பசுவை பொருத்தவரை, அதை தன் கன்றுக்கான பாலாக தான் பார்க்கிறது  - மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.  ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய் - கலாத்தியர் 4:6-7


இந்த  வெண்ணெயையும் பாலையும் பசுவினுடையது என்றும் சொல்லலாம், அதே சமயத்தில் கன்றுடையது (கன்றுக்கான பால்) என்றும் சொல்லலாம், ஆனால் அது அடிக்கப்பட்ட கன்றோடு சேர்த்துப் பரிமாறப்பட்டது,  அதே போல கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் நாம் பெற்றுக் கொண்ட பரிசுத்த ஆவியானவரை பிதாவின் ஆவி என்றும், அதே சமயத்தில் குமாரனின் ஆவி அல்லது கிறிஸ்துவின் ஆவி  என்றும் வேதாகமாம் சொல்லுகிறது - 8.மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். 9.தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. 10.மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும் - ரோமர் 8:8-10


14.சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள். 15.சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். 16.சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள். 17.சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். 18.இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன். 19.அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன் - பிலிப்பியர் 1:14-19 



பிதாவின் கிருபையா? குமாரனின் கிருபையா?


இப்படி வெண்ணெயையும் பாலையும் பசுவினுடையது என்றும், அதே சமயத்தில் கன்றுடையது (கன்றுக்கானது) என்று சொல்வது போல, கிருபையை குறித்துச் சொல்லும் பொழுதும், பரிசுத்த வேதாகமாம் தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையும் என்று சொல்லுகிறது - ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது - ரோமர் 5:15