வரங்களை பெற்ற சீஷர்களால் ஊமையான ஆவியை துரத்த கூடாமல் போன காரணத்தை லூக்காவின் சுவிசேஷ புத்தகத்தை அடிப்படையாக கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறோம், அதற்கான ஒரு காரணம் சீஷர்கள் தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்று சண்டை போடுகிறவர்களாக இருந்தார்களாம் - 46.பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று. 47.இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி, 48.அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார் - லூக்கா 9:46-48
தங்களை பெரியவராக நினைப்பது எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பதை சீஷர்கள் அறியாமல் தான் இருந்தார்கள், காரணம் பெரியவர் என்றால் கர்த்தர் ஒருவருக்கே பொருந்தும் - 30.தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். 31.இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. 32.அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். 33.அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான் - லூக்கா 1:30-33
அதனால் தான் கர்த்தர் இதை மற்றவர்கள் முன்பாக கேட்காமல் தன் வீட்டிற்கு வந்த பின்பு தன் சீஷர்களிடம் இதை குறித்து விசாரித்ததாக மார்க் எழுதியுள்ளார் - 33.அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார். 34.அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள் - மாற்கு 9:33-34
மேலும் கர்த்தர் தன்னுடைய சீஷர்களுக்கு, நாம் இயேசு கிறிஸ்துவின் பிள்ளையாக இருப்பதே மேன்மையான காரியம் என்பதை விளக்கி காட்டினார் - 35.அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி, 36.ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு: 37.இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார் - மாற்கு 9:35-37